சரக்கு வாகனங்களுடன் 169 தென்னை மரக்கன்றுகள் பறிமுதல்


சரக்கு வாகனங்களுடன் 169 தென்னை மரக்கன்றுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Feb 2022 2:39 AM IST (Updated: 12 Feb 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனங்களுடன் 169 தென்னை மரக்கன்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர்:

தீவிர வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில் முருகன் தலைமையில் போலீசார் ஜெயந்தி, கண்ணகி ஆகியோர் நேற்று காலை பெரம்பலூர் நகராட்சி 10-வது வாா்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துறைமங்கலம், பள்ளிவாசல் வீதியில் 2 சரக்கு வாகனங்கள் தென்னை மரக்கன்றுகளுடன் நின்று கொண்டிருந்தன.
வாக்காளர்களுக்கு வழங்கல்
இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அந்த சரக்கு வாகனங்களின் டிரைவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களில் ஒருவர் துறைமங்கலம் வாசுகி தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜயகுமார் (வயது 23) என்பதும், மற்றொருவர் பெரம்பலூர்-அருமடல் பிரிவு ரோடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்த மணி(42) என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த 2 சரக்கு வாகனங்களில் இருந்த தென்னை மரக்கன்றுகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்ததும், பெரம்பலூர் நகராட்சி 10-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் மணிவேல் என்பவர், அவருடைய சின்னமான குலையுடன் கூடிய தென்னை மரத்தை வாக்காளர்களிடையே பிரபலப்படுத்துவதற்காக, தென்னை மரக்கன்றுகளை வாக்காளர்களுக்கு வழங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
169 தென்னை மரக்கன்றுகள்
இதையடுத்து சரக்கு வாகனங்களுடன் ரூ.42 ஆயிரத்து 250 மதிப்பிலான மொத்தம் 169 தென்னை மரக்கன்றுகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவற்றை பெரம்பலூர் நகராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சரக்கு வாகனங்களுடன் தென்னை மரக்கன்றுகள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story