என்ஜினீயரிங்கில் சேர்ந்துவிட்டு விலகி மருத்துவ படிப்புக்கு சென்ற மாணவர்களுக்கு அபராதம் ரத்து - மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு
என்ஜினீயரிங்கில் சேர்ந்த பிறகு அதை விட்டு மருத்துவ படிப்புக்கு சென்ற மாணவர்களுக்கு அபராதம் ரத்து செய்யப்படுவதாக மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்.
ராமநகர்:
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அபராதம் விதிக்கப்படாது
கர்நாடகத்தில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றதால், அதற்கான இடங்கள் ஒதுக்கீட்டு பணியில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. அதனால் மருத்துவ படிப்புக்கு முன்பே என்ஜினீயரிங் படிப்பில் பல மாணவர்கள் சேர்ந்துவிட்டனர்.
இப்போது அவர்களில் பலருக்கு மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் இருந்து விலகி மருத்துவ படிப்பில் சேருகிறார்கள். அவ்வாறு சேருபவர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அந்த அபராதம் விதிக்கப்படாது. அதாவது அவர்கள் என்ஜினீயரிங் படிப்பிற்கு செலுத்திய கட்டணம் திருப்பி செலுத்தப்படும். இதற்காக கர்நாடக தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் வழிவகை
ஒரு படிப்பில் சேர்ந்த பிறகு அதை விட்டு வெளியேறினால் அத்தகைய மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 5 மடங்கு அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அபராதம் ரத்து முடிவு இந்த ஆண்டுக்கு மட்டும் பொருந்தும். அடுத்த ஆண்டில் மாணவர்கள் ஒரு படிப்பில் சேர்ந்துவிட்டு வேறு படிப்பிற்கு சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் விதிமுறை பொருந்தும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story