‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Feb 2022 3:41 AM IST (Updated: 12 Feb 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் தட்டுப்பாடு

சேலத்தை அடுத்துள்ளது  நாட்டாமங்கலம். இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இந்த பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. 
கோமதி, நாட்டாமங்கலம், சேலம்.

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியில் நந்தவனம் தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பழுதடைந்தது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரிசெய்து தர வேண்டும்.
வினோத், நந்தவனம் தெரு, அம்மாபேட்டை.
===
ஆபத்தான மின்கம்பம்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பி.நாட்டாமங்கலம் செல்லும் வழியில் மின் கம்பம் சாய்ந்தவாறு கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். எப்போது வேண்டுமானாலும் இந்த மின் கம்பம் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 ஆனந்த், பி.நாட்டாமங்கலம், சேலம்.
====
சுகாதார சீர்கேடு

சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் உள்ளது காட்டூர் ஏரி. இந்த ஏரியில் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கும். தற்போது இந்த ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலந்து செல்கிறது. இந்த கழிவுநீரில் கொசுக்கள் தேங்கி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜசேகர், காட்டூர் ஏரி, சேலம்.
===
வெண்ணாம்பட்டி ஏரி தூர்வாரப்படுமா?

தர்மபுரி நகரை ஒட்டியுள்ள குள்ளனூர்-வெண்ணாம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையே வெண்ணாம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீர் தேங்கும்போது வெண்ணாம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் நல்ல மழை பெய்த போதும் இந்த ஏரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழைநீர் தேங்கவில்லை. இந்த ஏரியில் புதர்கள், முட்செடிகள் அதிக அளவில் அடர்ந்து வளர்ந்து வருகின்றன. எனவே இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், வெண்ணாம்பட்டி, தர்மபுரி.
----
போக்குவரத்து நெரிசல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசமரத்தில் இருந்து லட்சுமி தியேட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் செல்வதால் போக்குவரத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது. சாலையை சிலர் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். இந்த கடைகளால் கடந்த 2 மாதத்தில் விபத்துகள் நடந்துள்ளன. மேலும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்து விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக  உள்ளது.
சிவன், சேந்தமங்கலம்.
====
குப்பை வண்டி வருமா?

சேலம் அம்மாபேட்டை வித்யா நகரில் பல மாதங்களாக துப்புரவு பணியாளர்கள்  வண்டியில் வந்து வீடுகளில் இருக்கும் குப்பைகளை வாங்கி செல்வதில்லை. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. சிலர் குப்பைகளை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குப்பை வண்டி வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், வித்யா நகர், சேலம்.
==

Next Story