எந்த ஆட்சியிலும் அகற்ற முடியாத திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. தான்-எடப்பாடி பழனிசாமி பேச்சு


எந்த ஆட்சியிலும் அகற்ற முடியாத திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. தான்-எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2022 3:51 AM IST (Updated: 12 Feb 2022 3:51 AM IST)
t-max-icont-min-icon

எந்த ஆட்சியிலும் அகற்ற முடியாத திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. தான் என்று சேலத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்:
எந்த ஆட்சியிலும் அகற்ற முடியாத திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. தான் என்று சேலத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று இரவு கன்னங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.வீ.ராஜூ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
மக்களின் பிரச்சினையை தீர்க்கும் முக்கியமான தேர்தல் உள்ளாட்சி தேர்தல். எனவே அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தலைவர்களாக வந்தால் தான் மக்களின் எண்ணம் நிறைவேறும். ஒரு காலத்தில் கன்னங்குறிச்சி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. அதே நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும்.
பொய்யான செய்தி
இந்த மாவட்டத்தை சேர்ந்தவன் நான். இந்த பகுதியில் இருக்கும் மக்கள் எப்போது நினைத்தாலும் 20 நிமிடங்களில், நெடுஞ்சாலை நகரில் உள்ள எனது இல்லத்தில் என்னை சந்திக்கலாம். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அந்த கட்சியின் எம்.எல்.ஏ. கூட, அவரின் வீட்டு கேட்டை கூட தொட முடியாது.
மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளாக 525 அறிவிப்புகளை கூறினார். இதில் அவர் ஒரு சிலவற்றை மட்டுமே நிறைவேற்றி உள்ளார். ஆனால் வாக்குறுதிகளில் 70 சதவீதம் வரை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டு வருகிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறி வருகிறார்.
நகை கடன் தள்ளுபடி
தி.மு.க.விற்கு பணம் கொடுத்த வரலாறு கிடையாது, எடுத்து தான் பழக்கம். 5 பவுனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்த நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 48 லட்சம் பேர் வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றார்கள். ஆனால் வெறும் 13 லட்சம் பேரின் நகை கடனை மட்டுமே தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டது. இதனால் 35 லட்சம் பேர் வங்கிகளில் வைத்த நகைகளை எப்படி மீட்பார்கள். மேலும் அவர்கள் அசலாக ரூ.1 லட்சம் வரையும், வட்டியாக ரூ.12 ஆயிரம் வரை வங்கிகளில் செலுத்தி நகைகளை மீட்க வேண்டும். இதை சொன்னால் என்னை பொய் பிரசாரம் செய்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
நீட் தேர்வு விவாதத்துக்கு தயார்
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்ததும் மக்களை மறந்து விட்டார் மு.க.ஸ்டாலின். தேர்தல் நெருங்கும் போது பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் தற்போது அதை கொடுத்தாரா?. பொங்கல் தொகுப்பு கொடுத்தது மக்களுக்காக அல்ல. ரூ.500 கோடி பணத்தை சுருட்டுவதற்காக தான். இந்த ஆண்டு தை பொங்கல் மக்களுக்கு துன்பமாக இருந்தது.
நீட் தேர்வு குறித்து எனக்கு சவால் விடும் அளவுக்கு மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். துண்டு சீட்டு மற்றும் எதையும் எடுக்காமல் மு.க.ஸ்டாலின் வந்தால் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதத்துக்கு நானும், ஓ.பன்னீர்செல்வமும் வருவதற்கு தயாராக உள்ளோம். 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு வந்தது. அப்போது அந்த கட்சியுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. ஆகும்.
உயிரோட்டமுள்ள திட்டங்கள்
ஏழை மக்களுக்கு நன்மை கிடைப்பதை தி.மு.க. விரும்பாது. ஏனெனில் ஏழை மக்களை தான் எளிதில் ஏமாற்ற முடியும். அந்த கட்சியில் ஆளே இல்லாததால் தான் அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்களுக்கு அமைச்சர் பதவிகளை கொடுத்துள்ளனர். தி.மு.க.வின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கிடைப்பதில்லை என அந்த கட்சியில் பலர் வேதனையில் உள்ளனர்.
எந்த ஆட்சியிலும் அகற்ற முடியாத உயிரோட்டமுள்ள திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். நான் பெற்ற பிள்ளைகளுக்கு தான் தற்போது மு.க.ஸ்டாலின் பெயர் வைத்து வருகிறார். சேலம் மாவட்டத்தில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன் என்பதை முதல்-அமைச்சர் வரட்டும் காட்டுகிறேன். ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும்.
ஆனால் பணம் கொடுத்து ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் வேட்பாளர்களை வாபஸ் வாங்க வைத்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பை எப்போதும் அ.தி.மு.க. ஏற்கும். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story