மதத்தை தூண்டிவிட்டு ஓட்டுகளை பெறுவதற்கு பா.ஜனதா முயற்சி-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு


மதத்தை தூண்டிவிட்டு ஓட்டுகளை பெறுவதற்கு பா.ஜனதா முயற்சி-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Feb 2022 3:54 AM IST (Updated: 12 Feb 2022 3:54 AM IST)
t-max-icont-min-icon

மதத்தை தூண்டிவிட்டு ஓட்டுகளை அறுவடை செய்ய பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று சேலத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சேலம்:
மதத்தை தூண்டிவிட்டு ஓட்டுகளை அறுவடை செய்ய பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று சேலத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
சேலம், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். 
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உழைப்பை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கினால் தான் வளர்ச்சி. ஆனால் மத்திய அரசு வரி மூலம் மட்டுமே வளர்ச்சியை அடையும் என்று நம்புகிறது. இவ்வளவு வரி வாங்கியும் நாடு கடனாளியாகவே இருக்கிறது. 
மதத்தை தூண்டிவிட்டு..
பல இடங்களில் எங்களின் வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்து போட்டியின்றி தேர்வு என கூறி கொண்டிருக்கின்றனர். போட்டிபோட்டு வெல்வது தான் ஜனநாயகம். ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செய்த சாதனைகளை கூற முடியாமல் மதத்தை தூண்டிவிட்டு ஓட்டுகளை பெறுவதற்கு பா.ஜனதா முயற்சிக்கிறது. சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தில் வெடிகுண்டு வீசியதே அவர்கள் தான்.
தஞ்சாவூரில் கிறிஸ்தவ பள்ளியில் மாணவி ஒருவரை மதம் மாறுவதற்கு சொல்லிவிட்டார்கள் என்று பா.ஜனதாவினர் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் கச்சத்தீவு, காவிரி நீர் உரிமைக்காக ஏன் போராடவில்லை. மீனவர்கள் சாகும் போது வந்து போராடவில்லை. சொந்த நாட்டு மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று கூறும் நீங்கள், ஏன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறீர்கள். இதை கேட்டால் தேச துரோகி என்று கூறி விடுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story