கியாஸ் கசிவால் தீ விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கணவன்-மனைவி சாவு
சென்னை மேற்கு முகப்பேரில் வீட்டில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த ஆடிட்டர், அவருடைய மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை மேற்கு முகப்பேர் கார்டன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அகமது ஷெரீப் (வயது 60). ஆடிட்டரான இவரது வீட்டில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் அவரது மனைவி நாகமுனிஷா(59), பால் காய்ச்ச கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.
அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. இது தெரியாமல் நாகமுனிஷா, அடுப்பை பற்ற வைத்ததும், பயங்கர சத்தத்துடன் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
தீ விபத்தில் நாகமுனிஷா, வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த அகமது ஷெரீப் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் இருந்த அகமது ஷெரீப்பின் தங்கை மலிதா, லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அகமது ஷெரீப், நாகமுனிஷா இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகமுனிஷா நேற்று முன்தினம் நள்ளிரவிலும், நேற்று மதியம் அகமது ஷெரீப்பும் பரிதாபமாக இறந்தனர். ஒரே நாளில் கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story