ராமநாதபுரத்தில் விடிய விடிய தொடர் மழை


ராமநாதபுரத்தில் விடிய விடிய தொடர் மழை
x
தினத்தந்தி 12 Feb 2022 4:55 PM IST (Updated: 12 Feb 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் விடிய விடிய தொடர்மழை பெய்தது. இந்த மழைகாரணமாக ராமநாத புரத்தில் விடிய விடிய மின்தடை ஏற்பட்டது. மழைபெய்து வந்த நிலையில் பள்ளிகளுக்கு தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அனைவரும் அவதிப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் விடிய விடிய தொடர்மழை பெய்தது. இந்த மழைகாரணமாக ராமநாத புரத்தில் விடிய விடிய மின்தடை ஏற்பட்டது. மழைபெய்து வந்த நிலையில் பள்ளிகளுக்கு தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அனைவரும் அவதிப்பட்டனர்.
கனமழை
மன்னார் வளைகுடா கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழையாக தொடங்கி விடிய விடிய பெய்த மழை அதிகாலையில் கனமழையாக பெய்தது. 
நண்பகல் வரை நீடித்த இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ச்சி நிலை உருவாகி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து முடிந்து பனி காலம் தொடங்கி முடிவடைந்த நிலையில் பனி விலகாமல் காலை நேரங்களில் பனி கொட்டியது. இதன்காரணமாக கோடை வெயில் தொடங்க காலதாமதாகும் என்று கருதப்பட்டது. 
விடியவிடிய மழை
இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ராமநாதபுரத்தில் இடைவிடா மழை பெய்தது. இதனால் விடியவிடிய மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மாவட் டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண சாரல் மழை யாக மட்டுமே பெய்தது. இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்து வந்த நிலையில் மற்ற மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் காலையில் மழை பெய்து வந்த நிலையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். 
கல்வித்துறை அதிகாரிகள் முறையாக அறிவிக்காததால் பள்ளிகள் விடுமுறை பற்றி தெரியாமல் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளில் வருகை பதிவு தொடங்கிய நேரத்தில் விடுமுறை என்று அறிவிக்கப் பட்டது. அனைவரும் பள்ளிகளுக்கு வந்தபின்னர் விடுமுறை விடப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
சிரமம்
இதனால் மீண்டும் மழையில் நனைந்து கொண்டு வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. சமீப காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைகாலங்களில் தெளிவான அறிவிப்பு சரியான நேரத்தில் தெரிவிக்காத நிலையே நீடித்து வருகிறது. கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் ஆகியோர் மாறிமாறி மற்றவர்கள் மீது பொறுப்பை சுமத்தி வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர் களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
கொரோனா பரவிவரும் நிலையில் மழையில் நனைந்து சளி காய்ச்சல் ஏற்பட்டால் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலையை முன்எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story