குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கூடலூர்-கோழிக்கோடு இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்
கூடலூர்-கோழிக்கோடு இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
மாநில நெடுஞ்சாலை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து கேரள மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தினமும் ஏராளமான சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் கூடலூர், பந்தலூர் தாலுகாவை சேர்ந்த ஏராளமான மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கேரளாவுக்கு சென்று திரும்புகின்றனர். இது தவிர பந்தலூர் தாலுகா பகுதியை சேர்ந்த ஏராளமான மக்களும் பல்வேறு பணிகளுக்காக தினமும் கூடலூர் வந்து செல்கின்றனர். மேலும் சீசன் காலங்களில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் அங்கு இரவு, பகலாக வாகன போக்குவரத்து இருந்து வருகிறது.
குண்டும், குழியுமாக...
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கும் சாலையாக விளங்குகிறது. முக்கிய சாலையாக இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோரை அவசர காலங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்சில் வேகமாக கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்து வாகன போக்குவரத்துக்கும் பயனில்லாத சாலையாக மாறிவிட்டது.
உரிய நடவடிக்கை
இதனால் பழுதடைந்து காணப்படும் கூடலூர்-கோழிக்கோடு சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, மாநில எல்லைகளில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது.
ஆனால் தரமான சாலை வசதி இல்லாமல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story