99.5 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி


99.5 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
x
தினத்தந்தி 12 Feb 2022 6:19 PM IST (Updated: 12 Feb 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 99.5 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 99.5 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.

சிறப்பு தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் அதிகரித்து இருந்தது. தற்போது குறைந்து வரும் நிலையில் தொற்று பரவலை முற்றிலும் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 22-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 222 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. முகாம்களில் செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது டோஸ் செலுத்தாதவர்களை கண்டறிந்து முகாம்களுக்கு அழைத்து வந்தனர். 

மேலும் 20 நடமாடும் முகாம்கள் மூலம் வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்கள், காய்கறி மற்றும் தேயிலை தோட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

99.5 சதவீதம் பேருக்கு...

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊட்டி நகராட்சியில் 15 இடங்களில் முகாம் நடந்தது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டவர்களை கண்டறிந்து கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரியில் முதல் டோஸ் 99.5 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 2-வது டோஸ் மற்றும் தகுதி வாய்ந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகின்றன. முதல் டோஸ் செலுத்தி குறிப்பிட்ட நாட்களாகியும் செலுத்தாமல் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி போடாமல் விடுபட்ட நபர்களை கண்டறிந்து வீடு, வீடாக சென்று செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story