கள்ளக்குறிச்சி நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா ஆய்வு


கள்ளக்குறிச்சி நகராட்சியில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா ஆய்வு
x
தினத்தந்தி 12 Feb 2022 9:37 PM IST (Updated: 12 Feb 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்


கள்ளக்குறிச்சி

89 பேர் போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 
கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் 21 பேர், தி.மு.க வேட்பாளர்கள் 18 பேர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு வேட்பாளர்கள், பா.ம.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி, தே.மு.தி.க உள்பட 89 பேர் போட்டியிடுகின்றனர்.

46 வாக்குப்பதிவு எந்திரங்கள்

நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 46 வாக்குச்சாவடியில் 45 ஆயிரத்து 726 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 46 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கூடுதலாக 10 எந்திரங்கள் என மொத்தம் 56 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சின்னம் பொருத்தும் பணி

இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்று அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. மண்டல அலுவலர்கள் சர்ஜில் காரல்மார்க்ஸ், முரளி, ராஜா மற்றும் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேலூர் மண்டல இணை இயக்குனர் குபேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான குமரன், நகராட்சி தேர்தல் உதவியாளர் தாமரைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story