கொரோனா தடுப்பூசி முகாம், வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு


கொரோனா தடுப்பூசி முகாம், வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Feb 2022 9:55 PM IST (Updated: 12 Feb 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம், வாக்கு எண்ணும் மையங்களில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

கம்பம்:
கம்பம் நகராட்சி பகுதியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று பார்வையிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு வழங்கப்பட்ட கோவிஷீல்டு,  கோவேக்சின் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, முகாமிற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வருகை தந்த நபர்களின் எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர்.
கூடலூர்
கூடலூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் (பூங்கா) நடுநிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம், வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்லும் பாதை, வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க உள்ள பாதுகாப்பு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இடங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, தாசில்தார் அர்ச்சுனன், கூடலூர் நகராட்சி ஆணையாளர் சித்தார்த்தன், வருவாய் அலுவலர் பொன்கூடலிங்கம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
உத்தமபாளையம்
உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ், ஓடைப்பட்டி, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, மார்க்கையன்கோட்டை, குச்சனூர் உள்ளிட்ட பேரூராட்சிகளின் வாக்குகளை எண்ணுவதற்கு தனித்தனியாக அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். இதேபோல் சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.


Next Story