விருத்தாசலத்தில் சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
விருத்தாசலத்தில் சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம்,
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நீதிமன்றம் அருகே தனி தாசில்தார் செல்வமணி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை, நிறுத்தி அதை ஓட்டி வந்த தரணி என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் 1 லட்சத்து 19 ஆயிரத்து 230 ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் விருத்தாசலம் நகராட்சி ஆணையர் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விருத்தாசலம் சார்நிலை கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ஆவணங்கள் இன்றி இதுபோன்ற பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது எனவும், உரிய ஆவணத்தை கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு சரக்கு வாகன டிரைவர் தரணியிடம் பறக்கும் படையினர் கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story