பிரதமா், கவர்னரை வம்புக்கு இழுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்; தி.மு.க.வுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
பிரதமா், கவர்னரை வம்புக்கு இழுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்
தேர்தல் பிரசாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கரூர் மாவட்டத்தில் புகழூர் கடைவீதி ரவுண்டானா, கரூர் வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர், ராயனூர், குளித்தலை பஸ் நிலையம், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கரூரில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
பா.ஜ.க.வை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என நினைக்கின்ற கட்சி.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு
தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகளை தற்போது திறந்து வைத்துள்ளோம். 8 மாத காலமாக தி.மு.க.வின் ஆட்சியை பார்த்துகொண்டு இருக்கிறீர்கள். எவ்வளவு பேருக்கு விடிந்தது. எனக்கு தெரிந்து யாருக்கும் விடிந்ததாக தெரியவில்லை.
தி.மு.க. 517 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளனர். முழுமையாக 7 தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாத அரசு. சட்டமன்ற தேர்தல் நடந்தபோது நகைக்கடனுக்கு முதல் கையெழுத்து போடுகிறோம் என்றார்கள். ஆனால் 73 சதவீத மக்களுக்கு நகைக்கடன் கிடையாது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கவில்லை.
8 மாதங்களாக...
பிரதமர் மோடி கொண்டு வருகிற ஒவ்வொரு திட்டத்திலும் ஸ்டிக்கர் ஒட்டி, அது தி.மு.க.வின் திட்டமாக விளம்பர படுத்துகிறார்கள். அதையெல்லாம் உடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பு. கரூருக்கு உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு வந்தபோது, பெண் ஒருவர் அவரிடம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிறோம் என கூறினீர்கள். அதனை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார். அதற்கு அவர் இன்னும் 4 வருடங்கள் இருக்கிறது என்கிறார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தி.மு.க.வின் ஆட்சியின் அவலத்தை கடந்த 8 மாதங்களாக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். மறுபடியும் அந்த தவறை செய்யாமல், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
தற்போது தி.மு.க.வினர் மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள். மத்தியில் ஆட்சியில் பா.ஜ.க. இருக்கிறது என்பதை தி.மு.க.வினர் மறந்துவிடாதீர்கள். பா.ஜ.க. வேட்பாளர்களை பணி செய்யவிடாமல் போஸ்டரை கிழிப்பது, பேனரை கிழிப்பது, அவர்களை மிரட்டுவது, வீடுகளுக்கு வரும் தண்ணீரை நிறுத்துவது, தொழிலில் தொந்தரவு செய்வது என சீண்டினால் தி.மு.க.வினருக்கு வட்டியும், முதலுமாக சேர்த்து கொடுக்கப்படும்.
இழுத்து மூடிவிடுவார்கள்
மதுரையில் ஒரு கூலித்தொழிலாளியின் மகளுக்கு நீட் மூலமாக அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. தி.மு.க. எதற்காக நீட் வேண்டாம் என்கிறது. எதற்கு பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு போடுகிறீர்கள். நீட் பற்றி பொதுமக்களுக்கு தெரிந்தால் தனியார் மருத்துவக்கல்லூரிகளை இழுத்து மூடிவிடுவார்கள். கோவையில் இருளர் சமுதாயத்தில் முதன்முதலாக ஒரு மாணவி நீட் மூலமாக இந்த வருடம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். திருப்பத்தூர் அரசுப்பள்ளியில் 65 ஆண்டுகளாக யாரும் டாக்டராகவில்லை. ஆனால் நீட் மூலமாக இந்த வருடம் அந்த பள்ளியில் இருந்து தேர்வாகி உள்ளார். அரசுப்பள்ளிகளில் இருந்து 545 பேர் டாக்டருக்கு படிக்க வந்துள்ளனர். தி.மு.க.வினர் நீட்டை எதிர்க்கிறார்கள்.
விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்
இப்போதைய பா.ஜ.க. பழைய பா.ஜ.க. அல்ல. இது புது பா.ஜ.க.. தேவையில்லாமல் தமிழக கவர்னரை சீண்டுவது, பாரத பிரதமரை சீண்டுவது சரியானது அல்ல. தி.மு.க. தப்புக்கணக்கு போட்டு வருகிறது. அதன் விளைவுகளை தி.மு.க. அரசு சந்திக்க வேண்டியிருக்கும். இன்னும் 4 ஆண்டுகள் அந்த அரசு இருக்குமா? இருக்காதா? என்பது அவர்கள் செயல்படுவதைப் பொறுத்து இருக்கிறது. முழுமையாக மத்திய அரசை அனுசரித்து சென்றால் 4 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டால் தமிழகத்தில் புதிய பா.ஜ.க., தி.மு.க.விற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து அவர்களுக்கு கொடுக்கும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
Related Tags :
Next Story