கிருஷ்ணகிரியில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு-அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை


கிருஷ்ணகிரியில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு-அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 12 Feb 2022 10:49 PM IST (Updated: 12 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு அமைச்சர் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி:
அலங்கார ஊர்தி
சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. இந்த ஊர்திக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கி வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த அலங்கார ஊர்தியில், வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட காட்சி, வீரன் சுந்தரலிங்கம், வீரத்தாய் குயிலி, பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகு முத்துக்கோன், காளையர்கோயில், கோட்டையின் மீது வீரர்கள் ஆங்கிலேயர்களுடன் சண்டையிடும் காட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தது. இது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
மாணவ, மாணவிகள பார்வையிட்டனர் 
இந்த ஊர்தி வரவேற்பு நிகழ்ச்சியில், அரசு இசை பள்ளி மாணவர்களின் மங்கள இசை, விடுதலை போரில் வேலு நாச்சியாரின் பங்களிப்பு குறித்து நாடகம் காண்பிக்கப்பட்டது. மேலும் கிராமிய கலைக்குழு மற்றும் பயிற்சி பட்டறை கலைக்குழுவினர் பங்கேற்ற பம்பை, பொய்கால்குதிரை, மரக்கால் ஆட்டம், தப்பாட்டம், சேவையாட்டம், கொம்புவாத்தியம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த ஊர்தியை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், நகர்மன்ற முன்னாள் தலைவர் பரிதா நவாப், தி.மு.க. நிர்வாகிகள் தட்ரஅள்ளி நாகராஜ், கே.வி.எஸ்.சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, அரசு இசைப்பள்ளி முதல்வர் திரிவேணி மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story