ஓசூரில் இரிடியம் இருப்பதாக கூறி செம்புக்குடத்தை விற்க முயற்சி-தம்பதி உள்பட 5 பேர் கைது


ஓசூரில் இரிடியம் இருப்பதாக கூறி செம்புக்குடத்தை விற்க முயற்சி-தம்பதி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 10:49 PM IST (Updated: 12 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் இரிடியம் இருப்பதாக கூறி செம்புக்குடத்தை விற்க முயன்ற தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போலீசில் புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாஸ்துசாலா நகரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி-சிவசங்கர். இவர்கள் தங்களது வீட்டுக்கு காரில் வந்த 3 பேர் ரூ.1 லட்சம், 5½ பவுன் தங்க நகை மற்றும் செல்போன்களை திருடி சென்றதாக, சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஓசூரில் போலீசாரின் வாகன சோதனையின்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தம்பதி கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிந்தது. இதையடுத்து தம்பதி, சிக்கிய 3 பேர் உள்ளிட்ட 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 
அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
5 பேர் கைது
ஓசூர் வாஸ்துசாலா நகரை சேர்ந்த ஸ்ரீதேவி-சிவசங்கர் தம்பதி தங்களது வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் இருப்பதாக கூறி செம்புக்குடத்தை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (39) என்பவரிடம் விற்க முயன்றதும் தெரியவந்தது. அரூரை சேர்ந்த வல்லரசு (23), இளையபிரபு (39), ஆகியோர் பன்னீர்செல்வம் மூலம், ஸ்ரீதேவி தம்பதியிடம் இரிடியம் என வைத்திருந்த செம்புக்குடத்தை பறித்து சென்றதும், இதனை நகை, பணம் திருடியதாக திசை திருப்பி தம்பதி புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இதையடுத்து தம்பதி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செம்புக்குடத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய அரூர் பகுதியை சேர்ந்த விஜயபிரபாகரன், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story