தமிழகத்தில் பா.ஜ.க.வால் தான் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைக்க முடியும் கடலூரில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


தமிழகத்தில்  பா.ஜ.க.வால் தான் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைக்க முடியும் கடலூரில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2022 10:54 PM IST (Updated: 12 Feb 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க.வால் தான் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைக்க முடியும் என கடலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


கடலூர், 

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை சிதம்பரம் வந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. புத்துணர்ச்சியோடு களம் காண்கிறது. இதுவரை இல்லாத எழுச்சி தற்போது தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. இந்த தேர்தலில் மக்களை நம்பி களத்தில் நிற்கிறார்களா? அல்லது ரவுடிகளை நம்பி களத்தில் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மிரட்டல் தொனிகளை தி.மு.க.வினர் கைவிட வேண்டும்.

அரசியல் ஆதாயம்

 தி.மு.க. அரசியல் ஆதாயம் தேட எதை வேண்டுமானாலும் செய்யும். அதை வைத்து நாம் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் பிரச்சினையில் தி.மு.க. எப்படி அரசியல் செய்கிறதோ, அதுபோல் மேலும் சிலரும் ஆரம்பித்திருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க வேண்டிய விஷயம் இது. பள்ளி நிர்வாகம்தான் அதுபோல் சொல்கிறது. அது அங்குள்ள மாணவர்கள்,

 பெற்றோர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய விஷயம். அதில் ஏதாவது பிரச்சினை என்றால் தான் அரசு தலையிட முடியும். அதற்காக அரசு மீது பழி போட கூடாது. மேலும் நடைபெற உள்ள இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை பா.ஜ.க. பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன், சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அண்ணாமலை நகர்

இதையடுத்து அண்ணாமலை நகருக்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அங்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி தேர்தலில் 6, 7, 13 ஆகிய வார்டுகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் மாவட்ட தலைவர் கே.பி.டி.இளஞ்செழியன், மாமல்லன் உள்பட பலர் உடனிருந்தனர்.

கடலூர்

இதேபோல் நேற்று மாலை கடலூர் வந்த பொன்.ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியில் உள்ள 28 வார்டுகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

 அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக 2 கட்சிகள் மாறி மாறி ஆண்டுகொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்கள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக எந்தவொரு நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வால் தான் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைக்க முடியும். அதனால் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story