மணலூர்பேட்டை பேரூராட்சியை கைப்பற்றப்போகும் பெண் தலைவர் யார்
மணலூர்பேட்டை பேரூராட்சியை கைப்பற்றப்போகும் பெண் தலைவர் யார்
மணலூர்பேட்டை
மணலூர்பேட்டை என்றாலே ஒரு காலத்தில் பொரி உற்பத்திக்கு மிகவும் பெயர்பெற்ற ஊராகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரியானது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படி பெருமையுடன் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நகராக விளங்கி வரும் மணலூர்பேட்டை இன்னமும் வளர்ச்சி அடையாத நிலையே காணப்படுகின்றது.
தமிழக அரசின் கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், போலீஸ் நிலையம், தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2 தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், 2 அரசு பள்ளிகள், ஒரு தனியார் ஐ.டி.ஐ., 4 திருமண மண்டபங்கள், தனியார் சர்க்கலை ஆலையின் கரும்பு அலுவலகம், மின்வாரிய அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை இங்கு உள்ளன.
12 ஆயிரம் மக்கள்
ஊராட்சியாக இருந்த மணலூர்பேட்டை கடந்த 1977-ம் ஆண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணலூர்பேட்டை பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 12 ஆயிரம் ஆகும். காங்கிரஸ் கட்சி மட்டும் 5 முறை கைப்பற்றியுள்ள இப் பேரூராட்சியை பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஒரு முறை கூட கைப்பற்றவில்லை. கடந்த முறை சுயேட்சை கைப்பற்றியது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மணலூர் பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், மணலூர் பேட்டையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
மேலும் குடிநீர், சாலை வசதி, திருக்கோவிலூர்- திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், மணலூர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றியத்தின் வசம் உள்ள இடத்தை பேரூராட்சி வசம் ஒப்படைத்து அங்கு காய்கறி மற்றும் பூ மார்க்கெட் அமைத்து தர வேண்டும், இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்ய அங்காடி வசதி வேண்டும், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், 24 மணிநேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை, அரசு கலை, அறிவியல் கல்லூரி, பொழுது போக்கு பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த பகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பெண் தலைவர் யார்?
மணலூர் பேட்டை பேரூராட்சியை 5 முறை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு வார்டில்கூட போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எனவே பேருராட்சியை கைப்பற்ற ஆளும் கட்சியான தி.மு.க. கடுமையாக போராடி வருகிறது. அதேபோல் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். மணலூர் பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி பொது(பெண்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தலைவர் பதவியை கைப்பற்றப்போகும் பெண் யார்? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடம் உள்ளது.
Related Tags :
Next Story