நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு-556 பேர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நேற்று 4 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் 556 பேர் பங்கேற்றனர்.
நாமக்கல்:
4 மையங்களில் போட்டித்தேர்வு
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் நேற்று இணையவழியில் தொடங்கியது. தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் 2 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, தோக்கவாடி கே.எஸ்.ஆர். இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயரிங் அன்டு டெக்னாலஜி, குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனம், வெண்ணந்தூர் நாமக்கல் டிஜிட்டல் ஹப் ஆகிய 4 மையங்களில் இணையவழியாக கணினிகள் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
200 பேர் தேர்வுக்கு வரவில்லை
காலை தமிழ் முதலாவது பாடப்பிரிவிற்கும், மதியம் தமிழ் 2-ம் பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தேர்வை எழுத 351 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 90 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 261 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதேபோல் பிற்பகலில் நடந்த தேர்வை எழுத 405 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 110 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 295 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தமாக நேற்று தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 756 பேரில் 556 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 200 பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பஸ்கள்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் வணிகவியல், இந்திய கலாசாரம், மனையியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், மதியம் இயற்பியல் பாடப்பிரிவிற்கும் தேர்வு நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வையொட்டி அனைத்து மையங்களுக்கும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story