9 குளங்களில் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி
திருப்பூர் வனச்சரகத்தில் உள்ள 9 குளங்களில் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
திருப்பூர்
திருப்பூர் வனச்சரகத்தில் உள்ள 9 குளங்களில் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
வெளிநாட்டு பறவைகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி சென்று வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வலசை வரும் பறவைகள் குறித்து அறியும் வகையில் கணக்கெடுப்பு பணி திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக வனத்துறை மூலமாக நடக்கிறது. இந்த கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. பறவைகள் ஆர்வலர்கள் துணையுடன் வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
திருப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோட்டில் உள்ள நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், சின்னாண்டிப்பாளையம் குளம் ஆகியவற்றில் வனச்சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கணக்கெடுப்பு பணியை தொடங்கினார்கள். பைனாகுலர், நவீன கேமராக்கள் மூலமாக பறவைகளின் தோற்றத்தை பார்த்து கணக்கெடுப்பு செய்தனர். மேலும் பறவைகளின் எச்சத்தை வைத்தும் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
கணக்கெடுப்பு பணி
நேற்று நடந்த கணக்கெடுப்பில் நஞ்சராயன் குளத்தில் 63 வகையான பறவை இனங்களும், மாணிக்காபுரம் குளத்தில் 38 வகையான பறவை இனங்களும், சின்னாண்டிப்பாளையம் குளத்தில் 40 வகையான பறவை இனங்களும் கண்டறியப்பட்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவினாசி ராமியம்பாளையம் குளம், செங்கமாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம்பாளையம் குளம், தாமரைக்குளம், சாமளாபுரம் குளம் ஆகிய 6 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
கணக்கெடுப்பு முடிந்ததும் வன உயிரின காப்பக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். வெளிநாட்டு பறவைகள் விவரம், அவை இந்த குளங்களுக்கு படையெடுக்க காரணம், உள்ளூரில் உள்ள பறவைகளுக்கும், வெளிநாட்டு பறவைகளுக்கும் உள்ள தொடர்பு உள்ளிட்ட விவரங்களை பறவை ஆர்வலர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story