பெண் இன்ஸ்பெக்டர், தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை


பெண் இன்ஸ்பெக்டர், தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
x
தினத்தந்தி 12 Feb 2022 11:41 PM IST (Updated: 12 Feb 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.7 லட்சம் சிக்கியது.

நாகர்கோவில்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.7 லட்சம் சிக்கியது.
இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். இவர் நாகர்கோவில் கோர்ட்டில் குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். இவருடைய மனைவி கண்மணி (வயது 52), நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
கண்மணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2017 முதல் 2021 ஜூலை வரை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதேபோல் சேவியர் பாண்டியன் மீதும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து          போலீசார் 2 பேரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் போலீசார் நேற்று காலையில் இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது வீட்டில் இருந்த இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். 
பணம் சிக்கியது
பின்னர் வீடு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர். மேலும் 2 பேருடைய வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததோடு, வங்கி கணக்கு ஒன்றில் நிரந்தர வைப்பு தொகை ரூ.90 லட்சத்திற்கான பத்திரம், ரூ.7 லட்சம் ஏலச்சீட்டுக்கான ரசீது மற்றும் நிலப்பத்திரம் இருந்தன. இதுகுறித்த சரியான விளக்கத்தை தருமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் கேட்டனர்.  
அதே சமயத்தில் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 9 ஆயிரம் மற்றும் ஏராளமான பரிசு பொருட்கள் சிக்கின. சிலரிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்ட எதுவும் எழுதப்படாத வெள்ளை காகிதங்களும் அங்கு கைப்பற்றப்பட்டன. 
சோதனையின் போது வீட்டில் உள்ள ஒரு அறையில் பெட்டி, பெட்டியாக இருந்த முக கவசம், கையுறைகள் மற்றும் சானிடைசர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை காலை 6.10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடந்தது.
தோழி வீட்டிலும்
அதே சமயம் கோட்டார் மீனாட்சிபுரம் மீனாட்சி கார்டனில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணியின் நெருங்கிய தோழியான அமுதா என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடத்தப்பட்டது. அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையில் சோதனை நடந்தது.
அங்கு ரூ.18 லட்சத்திற்கான கடன் பத்திரங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரம் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அமுதா அண்ணாபஸ்நிைலயம் அருகே உள்ள ஒரு வணிகவளாகத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதொடர்பாக சேவியர் பாண்டியன், கண்மணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருது பெற்றவர்
குற்ற வழக்குகளில் மிகுந்த நுண்ணறிவுடன் திறன்பட செயல்பட்டு பல வழக்குகளுக்கு தீர்வு கண்டதால் கண்மணிக்கு சமீபத்தில் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தோழி வீட்டில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை?
இந்த அதிரடி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பெண் இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் இருந்து ரூ.7 லட்சம் ரொக்க பணமும், சில முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது தோழி வீட்டில் ரூ.18 லட்சத்துக்கான கடன் பத்திரங்களும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்திற்கும், கடன் கொடுத்ததற்கான பத்திரம் பற்றி முறையான விவரங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் எந்தவித நடவடிக்கையும் இருக்காது. இந்த பணத்திற்கான உரிய காரணத்தை தெளிவுபடுத்தாவிட்டால், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனால் சம்பந்தப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும். பணி இடைநீக்கமும் செய்யப்படலாம். ஆனால் கைது நடவடிக்கை இருக்காது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story