ஜமுனாமரத்தூருக்கு திரும்பிய ஒற்றை தந்த யானை
9 மாதங்களுக்கு பிறகு ஜமுனாமரத்தூருக்கு திரும்பிய ஒற்றை தந்த யானை அரசு பஸ்சை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
9 மாதங்களுக்கு பிறகு ஜமுனாமரத்தூருக்கு திரும்பிய ஒற்றை தந்த யானை அரசு பஸ்சை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒற்றை தந்தத்துடன் திரியும் யானை
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர், உணவு கிடைக்காமல் ஆந்திராவில் இருந்து 12 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டது. அந்த யானை கூட்டத்தில் சில யானைகள் மின்சாரம் தாக்கியதில் பலியானது.
அதைத் தொடர்ந்து 6 யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அப்போது இந்த கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று வழித்தவறி சென்றது. இதனால் அந்த யானையை பிடிக்க முடியவில்லை.
வயதான காரணத்தால் கண்பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளதால் பெரும்பாலும் இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடத்து சென்று சாலையோரம் உள்ள காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளது.
ஒன்றை தந்தத்தை கொண்டு உள்ள இந்த யானையால் ஜவ்வாதுமலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள காட்டு பகுதியில் வலம் வந்த இந்த யானை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திடீரென மலையை விட்டு வெளியேறியது.
பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில் வலம் வந்தது. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு ஒற்றை தந்த யானை நேற்று முன்தினம் மீண்டும் திடீரென ஜமுனாமரத்தூருக்கு வந்தது.
ஜமுனாமரத்தூரில் இருந்து ஆலங்காயம் நோக்கி அரசு பஸ் குறைந்த பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அரசு பஸ்
அப்போது சாலையின் நடுவில் பஸ்சை வழிமறித்தப்படி அந்த யானை வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார்.
பின்னர் சாலையின் நடுவே நடந்து பஸ்சின் அருகே வந்த யானை தும்பிக்கையை ஜன்னல் வழியே நுழைத்து பிளறியது. இதனால் பயணிகள் முதலில் நடுங்கினர்.
அதன் பிறகு பஸ்சை ஒரு சுற்று சுற்றி வந்தது. ஆனால் அது பயணிகளை எந்த தொந்தரவும் செய்யவில்லை. இதனால் நிம்மதி அடைந்த பயணிகள் அந்த யானையை பல விதங்களில் செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
15 நிமிடத்திற்கு பிறகு சாலையோரத்தில் உள்ள காட்டிற்குள் சென்று மறைந்தது. அதன்பிறகு அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அந்த யானை ஜமுனாமரத்தூர் பகுதிக்கு திரும்பி உள்ளதால் வனச்சரக அலுவலர் குணசேகரன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story