பிஸ்டல் துப்பாக்கிகளுடன் தப்ப முயன்ற ஐகோர்ட்டு வக்கீல் உள்பட 5 பேர் கைது


பிஸ்டல் துப்பாக்கிகளுடன் தப்ப முயன்ற ஐகோர்ட்டு வக்கீல் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2022 12:03 AM IST (Updated: 13 Feb 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே பிஸ்டல் துப்பாக்கிகள், கஞ்சாவுடன் சொகுசு காரில் வந்த ஐகோர்ட்டு வக்கீல் உள்பட 5 பேரை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்தனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே பிஸ்டல் துப்பாக்கிகள், கஞ்சாவுடன் சொகுசு காரில் வந்த ஐகோர்ட்டு வக்கீல் உள்பட 5 பேரை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்தனர்.

போலீசார் சோதனை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி ரெயில் நிலையம் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையில் மேல்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தமிழக பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் சைகை மூலம் நிறுத்தும்படி கூறினர். ஆனால் போலீசாரை கண்டவுடன் சொகுசு கார் அதிவேகமாக பாய்ந்து சென்றது. உடனே போலீசார் தங்கள் வாகனத்தில் துரத்தி சென்று காரை மடக்கி நிறுத்தினர்.

அப்போது காரின் கதவை திறந்து கொண்டு அதில் இருந்த 8 பேர் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச்சென்று 5 பேரை மடக்கினர்.

பிஸ்டல் துப்பாக்கிகள்

இதனையடுத்து சொகுசு காரில் போலீசார் சோதனையிட்டனர். அதில் 2 பிஸ்டல் துப்பாக்கிகள், ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.3½ லட்சம் ரொக்கம், 5 கிலோ கஞ்சா ஆகியவை இருந்தன. அவற்றை சொகுசு காருடன் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பிடிபட்ட 5 பேரையும் மேல்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பேரணாம்பட்டு டவுன் லால் மஜித் தெருவை சேர்ந்த இம்ரான் (வயது 39), சென்னை ஐகோர்ட்டு வக்கீல் மாதவன், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிபாலன், மணலியை சேர்ந்த அசோக்குமார், திருவொற்றியூரை ே்சர்ந்த பாட்ஷா என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் சென்னை கொடுங்கையூர், வண்ணாரபேட்டை, வியாசர்பாடி, மணலி, திருச்சி, கும்பகோணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆள் கடத்தல், வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் என்பதும் தப்பி ஓடியவர்கள் இம்ரானின் அண்ணன் இம்ராஸ், ஹக்கீம், தேவா என்பதும் தெரிய வந்தது. 

குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டவர்

போலீசாரிடம் சிக்கிய இம்ரான், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணாம்பட்டு நகரில் காரை வேகமாக ஓட்டி பொது மக்கள் மீது மோதிய வழக்கில் கைது செய்யப்பட்டவராவார்.

அப்போது அவரிடம் பறவைகளை சுடும் நிஜ துப்பாக்கி, பா.ஜனதா கொடி, போலி நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேரணாம்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த இம்ரான் பேரணாம்பட்டில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார். பின்னர் வெளியே வந்த அவர் கூட்டாளிகளான ஐகோர்ட்டு வக்கீல் உள்ளிட்ட 8 பேருடன் ஆந்திர மாநிலத்திற்கு சொகுசு காரில் சென்று பலமநேர் பகுதியில் சுமார் 35 கிலோ எடையுள்ள கஞ்சாவை வாங்கியுள்ளனர்.
போலீசாரை இடித்து தள்ளினர்

அதில் 30 கிலோ கஞ்சாவை விற்று அதில் கிடைத்த பணத்துடன் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் லத்தேரி-காட்பாடி இடையில் வரும் போது காரை தடுத்து நிறுத்தி காட்பாடி போலீசார் சோதனையிட முயன்றனர்.

அப்போது காட்பாடி போலீசாரை இடித்து தள்ளி காரில் தப்பினர். இந்தநிலையில்தான் பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி ரெயில் நிலையம் அருகில் போலீசாரிடம் வசமாக சிக்கினர். 

இந்த நிலையில் இம்ரான், ஐகோர்ட்டு வக்கீல் மாதவன் உள்பட 5 பேரை கைது செய்து குடியாத்தம் சப்- மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தினர். தப்பியோடி தலைமறைவான இம்ரானின் அண்ணன் இம்ராஸ், ஹக்கம், தேவா ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சினிமாவை மிஞ்சும் வகையில்நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story