ஜல்லிக்கட்டு காளையை மீட்க குளத்திற்கு சென்றபோது சேற்றில் சிக்கிய 6 பேர் மீட்பு
ஜல்லிக்கட்டு காளையை மீட்க குளத்திற்கு சென்றபோது சேற்றில் சிக்கிய 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
அன்னவாசல்,
ஜல்லிக்கட்டு காளை
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் கலந்துகொண்டன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை ஒன்று வழித்தவறி திருநல்லூரில் உள்ள பெரியகுளத்திற்குள் சென்றுவிட்டது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுரேஷ், கருப்பையா, ராமன், தனபால், தமிழழகன், சந்தோஷ் ஆகிய 6 பேரும் குளத்தில் இறங்கி காளையை மீட்க சென்றுள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டு காளையின் கயிறு தண்ணீரில் இருந்த கருவேலமரத்தில் சிக்கிக்கொண்டது.
6 பேர் மீட்பு
இதனைதொடர்ந்து அந்த கயிற்றை அவர்கள் அவிழ்த்தனர். ஆனால் அவர்கள் 6 பேரும் குளத்தில் இருந்த சேற்றில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். காளையை மீட்க சென்றவர்கள் வெகுநேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் சேற்றில் சிக்கி இருப்பதை கண்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கயிறு மூலம் குளத்தில் இறங்கி அவர்கள் 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story