பழங்கால பொருட்களின் பெட்டகமான வெம்பக்கோட்டை தொல்லியல்மேடு
பழங்கால பொருட்களின் பெட்டகமான வெம்பக்கோட்டை தொல்லியல்மேடு விளங்குகிறது.
சாத்தூர்,
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழக தொல்லியல் துறை விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. தற்போது அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொல்லியல் தடயங்கள்
வெம்பக்கோட்டை தொல்லியல் மேடு, முந்தைய காலங்களில் தொல்மக்கள் வாழ்விடம் ஆகும். 1986-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் திருத்தங்கலை சேர்ந்த பாலச்சந்திரன், தொல்லியல் துறையை சேர்ந்த வேதாசலம் ஆகியோர் இதை கண்டுபிடித்து மேற்பரப்பை ஆய்வு செய்ததில் பல தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான ஊர்களில் வெம்பக்கோட்டையும் ஒன்றாகும். இந்த ஊரின் கிழக்கே வைப்பாற்றின் வடபகுதியில்தான் இந்த தொல்லியல் மேடு அமைந்துள்ளது. அங்கு அறியப்பட்ட தடயங்களின் மூலம் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கே மனிதர்கள் வசித்து வந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்த முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொல்லியல் மேட்டில் கடைக்கற்கால கருவிகளாகிய நுண்கருவிகள் அதிகமாக கிடைத்துள்ளன. மேலும் சங்க காலத்தில் மண்ணால் செய்யப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய மண்பாண்ட ஓடுகளும் வெம்பக்கோட்டையில் கிடைத்துள்ளன.
சங்க இலக்கியங்களில் சிறுகலங்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்ற பாத்திரங்களின் உடைந்த ஓடுகள் இங்கே அதிகம் கிடைக்கின்றன. அவை கருப்பு, சிவப்பு நிறம் உடையவையாகவும், உறுதியானதாகவும், மெல்லியதாகவும், பளபளப்பு உடையதாகவும் காணப்படுகின்றன. சங்க காலப் பானை ஓடுகள், சங்கு வளையல் துண்டுகளும் கிடைத்திருக்கின்றன.
வேறு எந்த தொல்மக்கள் வாழ்விடத்திலும் காணப்படாத வகையில், அதிக அளவு சங்கு வளையல்கள், எச்சங்கள் இங்கே கிடைத்துள்ளன. மேலும் சங்கு வளையல்கள் செய்ததுபோக சங்கின் எஞ்சியுள்ள பகுதிகள் அதிகம் கிடைக்கின்றன. எனவே இங்கு சங்கு வளையல் செய்யும் தொழில் சிறப்பாக நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
மேற்கண்ட தகவல்களை தெரிவித்த தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலச்சந்திரன் இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:-
அருங்காட்சியகம்
சங்க இலக்கியங்களில் சங்கு பொருட்கள் குறித்தும், அவற்றை குடைவது, அறுப்பது, அணிகலன் செய்வது பற்றிய பல குறிப்புகள் வந்துள்ளன. சங்குகளின் எச்சங்கள் கண்கள் போன்று காட்சி அளிக்கின்றன. சங்கினால் செய்யப்பட்ட காரணத்தால் தான் கைகளில் அணியப்பெறும் அணிகலன் வளை எனப்பட்டது.
தொல்லியல் மேட்டில் மேற்பரப்பு ஆய்வில் சேகரிக்கப்பட்ட சங்கு வளையல் துண்டுகள் விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டையில் தொல்லியல் மேட்டின் மேற்பரப்பில் மனிதன் பயன்படுத்திய அணிகலன்களின் அரிதான, விலைமதிப்புள்ள பச்சை மற்றும் நீலநிற கற்பாசிகளும், பவளப்பாசிகளும் கிடைத்துள்ளன.மேலும் மண்ணாலும், சங்கு ஆகியவைகளாலும் செய்யப்பட்ட பாசிகள் மற்றும் அழகிய வேலைப்பாடு உடைய காதணிகளும் கிடைத்துள்ளன.
மண்ணால் செய்யப்பட்ட நூல் நூற்கும் தக்கிளி, சதுரங்க காய்கள், சுடுமண் பொருள்களில் செய்யப்பட்ட பல்வேறு வகையான அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இத்தொல்லியல் மேட்டின் வரலாற்று சிறப்புக்கு சான்றாக ஒரு ரோமானிய மண்பாண்ட துண்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இவற்றின் மூலம் சங்ககாலத்தில் வெம்பக்கோட்டை சிறந்து விளங்கியதற்கு இவை சான்றாக விளங்குகின்றன.
முற்காலப் பாண்டியர் காலம் என்பது கி.பி. 550-ல் தொடங்கி கி.பி.1000 வரை கணக்கிடப்படுகிறது. அக்காலத்தில் வெம்பக்கோட்டையானது வெண்பைக்குடி என புகழ்பெற்று விளங்கியது. வெண்பைக்குடியை தலைமையாகக் கொண்டு வெண்பைக்குடிநாடு சீரும் சிறப்புமாக விளங்கியது என்பது அக்காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
சிவன் கோவில்
வெம்பக்கோட்டையில் தற்போது உள்ள சிவன் கோவில் சொக்கநாதசுவாமி கோவில் என அழைக்கப்படுகிறது. இது பிற்காலப்பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இது முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது..
இங்கு கிடைத்த செப்புப்பட்டயம் ஒன்று நாயக்கர் காலத்தின் சமகாலத்தில் தென்காசியை தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்த தென்காசி பாண்டியர் மற்றும் நாயக்க மன்னர்கள் தொடர்புகளை விவரிக்கிறது.
நெசவுத்தொழில்
பாண்டிய நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றாகத்திகழ்ந்த வெண்பைக்குடி பருத்தி விளைவதற்கு ஏற்ற கரிசல் நிலத்தை பெற்ற பகுதியாகும். அதனால் இப்பகுதியில் பருத்தியைக்கொண்டு ஆடை நெய்யும் நெசவுத்தொழில் 10-ம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கியுள்ளது.
இங்குள்ள கூத்தன்குடியில் ஆடை வணிகம் செய்யும் வணிகர் குடியிருப்பு ஒன்று இருந்திருக்கிறது. கூத்தன்குடி என்பது தற்போது எதிர்க்கோட்டை என்ற ஊராக அமைந்துள்ளது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் மிக்க வெம்பக்கோட்டையில் தற்போது அகழாய்வு பணி நடைபெறுவது என்பது நம் மாவட்டத்தில் கிடைத்த பெருைம ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story