பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி-பிரசாத கடையில் ரூ.55 ஆயிரம் திருட்டு; எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்


பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி-பிரசாத கடையில் ரூ.55 ஆயிரம் திருட்டு; எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2022 2:08 AM IST (Updated: 13 Feb 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதுடன், அங்கிருந்த பிரசாத கடையில் ரூ.55 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

கடத்தூர்
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதுடன், அங்கிருந்த பிரசாத கடையில் ரூ.55 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.  
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
கொண்டத்து காளியம்மன் கோவில்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணி அளவில் பூட்டப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி அளவில் நடை அடைக்கப்படும். 
இந்த கோவிலுக்கு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம், திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். குறிப்பாக அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த கோவிலில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு கோவில் நடையை அடைத்து விட்டு பூசாரிகள் சென்றுவிட்டனர். 
கோவிலில் கொள்ளை முயற்சி
இந்த நிலையில் நள்ளிரவில் கோவில் பகுதிக்கு மர்ம நபர்கள் வந்து உள்ளனர். அவர்கள் கோவிலின் பின்புறம் உள்ள சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்து உள்ளனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பிரசாத கடைக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த மேஜை டிராயரை திறந்து ரூ.55 ஆயிரத்தை எடுத்து உள்ளனர். 
இதையடுத்து கோவில் குண்டம் இறங்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றனர். ஆனால் அவர்களால் உண்டியலை உடைக்க முடியவில்லை. 
அலாரம் ஒலித்தது
பின்னர் நைசாக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப கதவை திறக்க மர்ம நபர்கள் முயன்றனர். அப்போது  திடீரென அங்கிருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. அலார ஒலியை கேட்டதும், பதற்றம் அடைந்த மர்ம நபர்கள் தங்களுடைய திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
பரபரப்பு
மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story