ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் தொடங்கின; சொந்த மாவட்டத்தில் மையம் அமைக்காமல் அலைக்கழித்ததாக புகார்


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் தொடங்கின; சொந்த மாவட்டத்தில் மையம் அமைக்காமல் அலைக்கழித்ததாக புகார்
x
தினத்தந்தி 13 Feb 2022 2:22 AM IST (Updated: 13 Feb 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகள் நேற்று தொடங்கின. இதற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்காமல் அலைக்கழித்ததாக புகார் கூறப்பட்டது.

ஈரோடு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகள் நேற்று தொடங்கின. இதற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்காமல் அலைக்கழித்ததாக புகார் கூறப்பட்டது.
போட்டித்தேர்வு
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு பாட வாரியாக ஒரு வாரம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி, வி.இ.டி. கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி, ஈரோடு செங்குந்தர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி என 5 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் 1,050 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சோதனை
காலை 7.15 மணி முதல் ஆசிரிய- ஆசிரியைகள் தேர்வு மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. நுழைவு சீட்டு, தடுப்பூசி சான்றிதழ் தவிர வேறு எந்த பொருளும் உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடக்டர் சோதனையும் நடந்தது. தேர்வர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக புகைப்படம் எடுத்த பிறகே தேர்வு அறைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடந்தது. இதுபோல் பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டது.
பிறமாவட்டத்தினர்
தேர்வு எழுத வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் சிலர் நேற்று முன்தினமே வந்து மையங்களை பார்த்து, அருகிலேயே அறை எடுத்து தங்கும் நிலை ஏற்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து வந்ததால் சரியான நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு வர முடியாமல் பலரும் திணறினார்கள். இந்த பதற்றத்தில் தேர்வை சரியாக எழுத முடியாத நிலையும் ஏற்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அதிருப்தி
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ‘ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் அல்லது அதிக ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதை தடுக்கும் நோக்கத்தில் இப்படி அலைக்கழிக்கப்படுவதாக எண்ணுகிறோம். தேர்வு மையங்களை திட்டமிட்டே அமைத்து இருக்கிறார்கள். பிற மாவட்டங்களில் தேர்வு மையம் அமைத்தது பற்றிய அறிவிப்பு 3 நாட்களுக்கு முன்பு, செல்போனில் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. அதனுடன் வந்த இணைய இணைப்புக்கு சென்று பார்த்தால் தேர்வு மையம் அமைக்கப்பட்ட மாவட்டம் மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எங்கே தேர்வு மையம் என்று தெரியாமல் என்ன செய்வது... தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பு நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய செல்போனில் குறுந்தகவல் வந்தது. சிலருக்கு முதல் நாள் இரவில்தான் இந்த தகவல் வந்தது. காலை 7 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும், எங்கே போய் பிரிண்ட் எடுப்பது என்று தெரியாமல் திகைக்கும் நிலை ஏற்பட்டது. ஆசிரியர் போட்டித்தேர்வு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.
அவநம்பிக்கை
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இந்த தேர்வு முழுமையாக கணினி மூலம் நடக்கிறது. தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான கணினிகள் இருக்கும் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு மையங்கள் அமைக்கப்படுகின்றன. வேறு எந்த நோக்கமும் இல்லை’ என்றார்.

Next Story