நம்பியூர் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைப்பு


நம்பியூர் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2022 2:26 AM IST (Updated: 13 Feb 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

நம்பியூர்
நம்பியூர் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.
ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை
நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த 3 ஆடுகளை கடித்துக்கொன்றது. பின்னர் மறுநாள் நம்பியூர் செட்டியம்பதியில் இரவில் புகுந்த சிறுத்தை, 2 ஆடுகளை கடித்துக்கொன்றது. இதனால் நம்பியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 
இதைத்தொடர்ந்து சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் டி.என்.பாளையம் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக நம்பியூர் பகுதியில் மொத்தம் 26 கண்காணிப்பு கேமராக்களையும் வனத்துறையினர் பொருத்தினர். 
நவீன தெர்மல் கேமரா
ஆனால்  கண்காணிப்பு கேமராவின் பார்வைக்குள் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன தெர்மல் கேமராவையும் வனத்துறையினர் பயன்படுத்தி வந்தனர். எனினும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். நம்பியூர் பகுதியில் ஏராளமான தோட்டங்கள் மற்றும் புதர்கள் உள்ளதால் இதில் சென்று பதுங்கி கொள்வதால் சிறுத்தையை கண்டுபிடிப்பதில் வனத்துறையினர் சிரமப்பட்டனர். 
3 இடங்களில் கூண்டு
இந்த நிலையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை பகுதியில் வேலுச்சாமி என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தையானது அங்கு நின்று கொண்டிருந்த 4 நாய்களை கடித்துக்கொன்றது. பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து நாய்களை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதி அடைய செய்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.  எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பது என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை, இருகாலூர், எலத்தூர் ஆகிய 3 இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. மேலும் அந்த கூண்டுகளில் ஆட்டை வனத்துறையினர் கட்டி வைத்து உள்ளனர். 
மேலும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொங்கர்பாளையம்
இதேபோல் டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் அருகே உள்ள கம்பனூர் காலனி பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்பவரது வீடு அருகே நின்றிருந்த நாயையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை கவ்வி தூக்கி சென்றது. 
இதனையடுத்து அந்த பகுதியிலும் சிறுத்தை நடமாட்டத்தை தெர்மல் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Next Story