கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 12 Feb 2022 9:14 PM GMT (Updated: 12 Feb 2022 9:14 PM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த ஆண்டில் நடைெபறும் முதல் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார்.

பெங்களூரு:
  
‘ஹிஜாப்’ விவகாரம்

  கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (தலை பகுதியை மூடும் துணி) அணிந்து வந்தனர். வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை கண்டித்து அந்த மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

  இந்து மாணவ-மாணவிகளும் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பரபரப்பான சூழ்நிலை

  இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஐகோர்ட்டு, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாணவர்கள் யாரும் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது என்று தடை விதித்துள்ளது.

  இதையடுத்து 10-ம் வகுப்பு உயர்நிலை பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் தற்போது அமைதி நிலை நிலவுகிறது. கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டால், போராட்டங்கள் நடைபெறுமா? என்று தெரியவில்லை. இத்தகைை பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது.

கவர்னர் உரையாற்றுகிறார்

  சட்டசபையின் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் உரை முடிவடைந்ததும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். பிறகு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

  சட்டசபை கூட்டத்தொடர் குறித்து சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கர்நாடக சட்டசபையின் கூட்டுத்தொடர் 14-ந் தேதி (நாளை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றகிறார். விதான சவுதாவில் விதான சவுதாவின் கிழக்கு பகுதியில் உள்ள படிக்கட்டுகள் மூலம் சபைக்கு வருமாறு கவர்னரை கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதற்கு முன்பு வரை தரை தளத்திற்கு வந்து மின்தூக்கி மூலம் சபைக்கு வருவார். கர்நாடக அரசு 2 சட்ட மசோதாக்களை வழங்கியுள்ளது. அதாவது கர்நாடக முத்திரைத்தாள் மற்றும் குற்ற சட்ட திருத்த மசோதாக்கள் வந்துள்ளன.

அனைவருக்கும் பேச வாய்ப்பு

  சட்டசபை உறுப்பினர்களிடம் இருந்து 2,062 கேள்விகள் வந்துள்ளன. சட்டசபை கூட்டத்தில் காகித பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கிறேன். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நேரத்தை ஒதுக்க முடியாமல் இருக்கலாம். அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் உரையாற்ற வருமாறு கவர்னரை நேரில் சந்தித்து நான் மற்றும் மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் கவர்னருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

  தேர்தல் சீர்திருத்தம் ஜனநாயகத்திற்கு முக்கியமானது. இதுகுறித்து சட்டசபையில் விவாதிப்பது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். சபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும். மேல்-சபையில் இதுகுறித்து விவாதிக்குமாறு மேலவை தலைவரிடம் கூறியுள்ளேன்.

கடிதம் எழுதியுள்ளேன்

  கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், துணைவேந்தர்கள் மற்றும் புகழ் பெற்ற கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்குமாறு நான் கடிதம் எழுதியுள்ளேன். ஹிஜாப் அணியும் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். கோர்ட்டு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
  இவ்வாறு காகேரி கூறினார்.

பிரச்சிைனகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயார்

  இந்த கூட்டத்தொடரில் ஹிஜாப் விவகாரத்தை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அத்துடன் ேமகதாது அணை, விைலவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலடி கொடுக்க முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் தயாராகியுள்ளனர்.

  இந்த முறை நடைபெறும் கூட்டத்தொடரில் காரசார வாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் இடம் பெற உள்ளன. கூட்டத்தொடரையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story