வேட்பாளர்களை மிரட்டி போட்டியில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. முயற்சி


வேட்பாளர்களை மிரட்டி போட்டியில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. முயற்சி
x
தினத்தந்தி 13 Feb 2022 3:02 AM IST (Updated: 13 Feb 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டி போட்டியில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. முயற்சி செய்கிறது என சீமான் குற்றம் சாட்டினார்.

தஞ்சாவூர்;
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டி போட்டியில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. முயற்சி செய்கிறது என சீமான் குற்றம் சாட்டினார்.
பேட்டி
தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
அப்புறப்படுத்த தி.மு.க. முயற்சி
அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. ஆனால் எங்களுக்கு எண்ணற்ற இடையூறுகள் வருகிறது. எங்கள் வேட்பாளர்களை அச்சுறுத்தியும், மிரட்டி கையெழுத்து வாங்கியும் போட்டியில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. முயற்சி செய்கிறது.
இதுகுறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தாலும் எதுவும் நடக்காது. இவர்கள் ஆட்சி(தி.மு.க.) இப்படித்தான் இருக்கும் என்பது தெரியும். இதையெல்லாம் எதிர்கொண்டு நாங்களும் போட்டியிடுகிறோம். ஊழலற்ற, லஞ்சமற்ற நல்லாட்சி உள்ளாட்சியில் மலர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
வரவேற்பு
உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் கேள்வி கேட்டதை வரவேற்கிறேன். மக்களுக்கு துணிவு வர வேண்டும். கேள்வி கேட்பது மக்களின் உரிமை. நம் உரிமையை நாம் கேட்க வேண்டும். மதிப்புமிக்க ஜனநாயகத்தில் கடைசியாக இருக்கிற உரிமை என்பது வாக்குரிமைதான். அதை நாம் விற்பதால், எந்த உரிமையையும் பெற முடியாமல் போய்விடுகிறது.
மக்களை பார்த்து வேட்பாளர்கள், பதவியில் இருப்பவர்கள் அஞ்சுகிற காலம் எப்போது வருகிறதோ, அப்போது எல்லாமே சரியாகி விடும். அந்த நிலை, வாக்குக்கு காசு வாங்குவதை நிறுத்தும்போதுதான் வரும். இந்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும்.
சாதனை செய்யவில்லை
கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசுப் பண மதிப்பிழப்பு, தனியார்மயம், ஜி.எஸ்.டி., பொதுத்துறைகள் விற்பனை போன்றவற்றை தவிர வேறெந்த சாதனையையும் செய்யவில்லை. இதையெல்லாம் சாதனையாக சொல்ல முடியாத மத்திய அரசு, தேர்தல் காலத்தில் ஹிஜாப் விவகாரத்தை உருவாக்கி, ஜாதி, மத பிரச்சினையை தூண்டிவிட்டு இழிவான அரசியலை செய்து வருகிறது. இதனால், இவ்வளவு காலம் பேசாத நீட் தேர்வு பிரச்சினை, பர்தா பிரச்சினை குறித்து மத்திய அரசு பேசுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஓரே குடும்ப அட்டை போன்றவற்றை கூறும் மத்திய அரசு ஒரே குளம், ஒரே சுடுகாடு என்பதை வலியுறுத்துவதில்லை. இதை எல்லாம் கொண்டு வந்த பிறகு தேச பக்தி எனக் கூற வேண்டும்.
இஸ்லாமியர்களின் பாதுகாவலர் நாங்கள்தான் என கூறிக்கொள்ளும் தி.மு.க., சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஜாமீன் வழங்க கூட நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு எப்படி அவர்கள் விடுதலை செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story