கொளத்தூரில் பறக்கும் படையினர் சோதனை: மின்வாரிய ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்-அடகுவைத்த நகையை திருப்ப மாமனாரிடம் பணம் வாங்கி வந்ததாக தகவல்
கொளத்தூரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்தை மின்வாரிய ஊழியரிடம் இருந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவர் அடகுவைத்த நகையை திருப்ப மாமனாரிடம் பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
கொளத்தூர்:
கொளத்தூர் பண்ணவாடி சாலையில் நேற்று மேட்டூர் துணை தாசில்தார் அமுதா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவரிடம் ரூ.1 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. பணத்திற்கான ஆவணங்கள் எதையும் அவர் காண்பிக்காததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கொளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பணத்தை கொண்டு சென்றவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சரவணன் (வயது 44) என்பதும், பண்ணவாடியில் உள்ள தனது மாமனாரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு தான் அடகு வைத்த நகைகளை திரும்ப பெறுவதற்காக அந்த பணத்தை கொண்டு சென்றதாகவும் அவர் பறக்கும் படையினரிடம் தெரிவித்தார். இது தொடர்பான ஆவணங்களை கொண்டு வருமாறு அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story