தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி; கலெக்டர், போலீஸ் கமிஷனர் பங்கேற்பு
தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரை அடுத்த திருமழிசை பகுதியில் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தேர்தல் பார்வையாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் தாங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அப்போது அங்கிருந்த அரசு அலுவலர்கள், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டு இருந்த பெரிய அளவிலான ராட்சத பலூனை பொதுமக்கள் பார்வைக்காக பறக்கவிட்டனர். இறுதியில் வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் உதவி கமிஷனர் மகேஷ், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, வேளாண்மை உதவி இயக்குனர் சங்கரி, மகளிர் திட்ட அலுவலர்கள் கல்பனா, சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேகர், மதியழகன், ஜானகிராமன், நிர்வாக மேலாளர்கள் ஜோசப், பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story