காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியான கொய்மலர்கள்
காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொய்மலர்கள் ஏற்றுமதியானது.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலாதலமான இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் பிரகாசபுரம், குண்டுப்பட்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பசுமை குடில்கள் அமைத்து உயர்ரக கொய்மலர்களான காரனேசன், ஜெர்பரா மற்றும் பல்வேறு வண்ண ரோஜாக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த கொய்மலர்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
காதலர் தினம்
காதலர் தினத்தன்று இந்த உயர்ரக கொய்மலர்களை காதலர்கள் தங்களது காதலிக்கு பரிசாக கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். மேலும் பூங்கொத்துகள் தயாரிப்பதற்கும் இவை பயன்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 20 பூக்கள் கொண்ட கொய்மலர்க்கொத்து சுமார் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானது.
இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் 20 பூக்கள் கொண்ட மலர்க்கொத்து சுமார் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் மலைக்கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் காதலர் தினத்தில் மலர்களை ஏற்றுமதி செய்யமுடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது ஊரடங்கு இல்லாததால் விவசாயிகள் கொய் மலர்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story