மழையால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்
கூத்தாநல்லூர் பகுதியில் மழையால் பருத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் பகுதியில் மழையால் பருத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பருத்தி சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி அறுவடை பணிகளுக்கு பிறகு, மாற்று பயிராக பருத்தி சாகுபடி பணிகளை அப்பகுதி விவசாயிகள் பலர் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தற்போது பல இடங்களில் சம்பா தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில், கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பயிரிடப்பட்ட பருத்தி பயிர்கள் தற்போது வளர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து பெய்தால், பருத்தி பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மழை குறுக்கீடு
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘நடப்பாண்டில் குறுவை மற்றும் சம்பா தாளடி அறுவடை காலங்களில் மழை பெய்து அறுவடை பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன். மகசூல் பாதிப்பையும் ஏற்படுத்தியது. இதனால், விவசாயிகள் பலர் ஏற்கனவே கவலையில் உள்ளனர். தற்போது பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டு உள்ளது. இதனால், வளர்ந்த நிலையில் உள்ள பருத்தி பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
பருத்தி சாகுபடி செய்வது ஒரு சவாலான விஷயம் ஆகும். பருத்தி சாகுபடி பணிகளுக்கு தேவையான நேரத்தில் மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தற்போது தேவையற்ற நேரங்களில் மழை குறுக்கிட்டு மழை தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டால், பருத்தி சாகுபடி பணிகள் பாதிப்பு அடையும்’ என்றனர்.
Related Tags :
Next Story