பயறு வகை பயிர்கள் குறித்து இணையவழி பயிற்சி


பயறு வகை பயிர்கள் குறித்து இணையவழி பயிற்சி
x
தினத்தந்தி 13 Feb 2022 10:17 PM IST (Updated: 13 Feb 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் பயறு வகை பயிர்கள் குறித்து இணையவழி பயிற்சி நடந்தது.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலத்தில் பயறு வகை பயிர்கள் குறித்து இணையவழி பயிற்சி நடந்தது.

பயறு வகைகள் தினம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக பயறு வகைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு பயறு வகைகள் குறித்த இணைய வழி பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயறு வகைகள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஞானமலர் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் அமைந்துள்ள தேசிய பயறு வகைகள் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் சசிகுமார் கலந்து கொண்டு பேசினார். தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் மாரிமுத்து பேசுகையில், பயறு வகைப் பயிர்களின் ரகங்கள், உழவியல் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை விவசாயிகளுக்கு விளக்கினார். 
பயறு வகை பயிர்களை தாக்கக்கூடிய பூச்சி மற்றும் நோய்களைப் பற்றி ராஜா ரமேஷ் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
முன்னதாக வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இந்த இணையவழி பயிற்சியில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மாணவிகளுக்கு போட்டிகள்

உலக பயறு வகைகள் தினத்தை முன்னிட்டு பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம், உற்பத்தி மற்றும் பயிறு வகை பயிர்களின் சத்துக்கள் பற்றிய வினாடி-வினா மற்றும் கட்டுரை போட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை மற்றும் திருச்சிஅன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சேர்ந்த 21 மாணவிகள் பங்குபெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
முன்னதாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை உதவி பேராசிரியர் கருணாகரன் பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றி அறிவியல் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். இதில் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். மேலும் நெல் தரிசில் பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் எடுக்க வேண்டிய மேலாண்மை உத்திகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் செல்வமுருகன் நன்றி கூறினார்.

Next Story