வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்ற முட்டி மோதும் வேட்பாளர்கள்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 13 Feb 2022 10:27 PM IST (Updated: 13 Feb 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்ற முட்டி மோதும் வேட்பாளர்களால் தெருக்கள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கரூர்
தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.  கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் நகராட்சி உள்ளிட்ட 3 நகராட்சிகளும், புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மருதூர், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் உள்ளிட்ட 8 பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் 17-ந் தேதி நிறைவடைய உள்ளது.
 இந்த நிலையில் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். கரூர் மாநகராட்சியை பொருத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா கட்சி, நாம்தமிழர் கட்சி, தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சுயேட்சை கட்சி வேட்பாளர்கள் என மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வார்டுகளில் மட்டும் 266 வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து எப்படியாவது வெற்றி பெற்று மாநகராட்சி கவுன்சிலராக வேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் இறங்கி வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
விழாக்கோலம் பூண்டது 
இதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருவதுடன் சில வேட்பாளர்கள் வாக்காளர்களின் கால்களில் விழுந்து வெற்றி பெற்றால் என்னென்ன பணிகள் நிறைவேற்றி தருவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இன்னும் சிலர் மேல தாளங்களுடன் சென்று வாக்கு சேகரித்தும் வருகின்றனர். இவ்வாறு மாநகராட்சி வார்டு பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்பட சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் நகராட்சி பகுதி முழுவதும் பொதுமக்கள் உற்சாகத்துடன் காணப்படுவதுடன் தெருக்கள் தோறும் விழாக்கோலம் பூண்டது போல் உள்ளதை காண முடிகிறது.

Next Story