சின்னம் பொருத்தும் பணி நிறுத்தம்


சின்னம் பொருத்தும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Feb 2022 10:43 PM IST (Updated: 13 Feb 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதால் சின்னம் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னம் பொருத்தும் பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. அப்போது சில எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னம் பொருத்தும் பணியை மேற்கொள்ளுவதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் சிலர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படக்கூடும், 
எனவே வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் முழுமையாக சரிபார்த்து சரியான முறையில் இருக்கும் எந்திரங்களை மட்டுமே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த வேண்டும் என்றனர். விழுப்புரம் நகராட்சிக்கு மொத்தம் 129 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மாற்று வாக்குப்பதிவு எந்திரங்கள்

ஆனால் நேற்று வரை 110 வாக்குப்பதிவு எந்திரங்களில் மட்டுமே சின்னம் பொருத்தபட்டுள்ளது. ஆனால் பல எந்திரங்கள் பழுதாகி உள்ளதால்  அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக  வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தபட்டு உள்ளது. இந்த பணி முடிந்தவுடன் மீண்டும் நகராட்சிக்கு தேவையான மேலும் 19 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் மாற்று வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறும். சீரமைக்க முடியவில்லையெனில் அதற்கு பதில் மாற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story