மேரிமாதா சிலை உடைப்பு
கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேரி மாதா சிலை உடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் கருங்காலிகுப்பம் சாலை அருகில் உள்ள அந்தோணியார் தெருவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மேரி மாதா சிலை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தினமும் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மேரி மாதா சிலையை உடைத்துள்ளனர். மேலும் அதன் அருகில் சாலையோரம் வசிக்கும் முருகன் என்பவர் நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் இன்டிகேட்டர்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் மேரி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர்
அப்போது அந்தப்பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில் ஒருவர் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாதா சிலையை உடைத்தது கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள நாரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜி (வயது 39) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து விஜியை போலீசார் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியதாகவும், கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story