பா.ஜ.க. சிறுபான்மைபிரிவு தேசிய செயலாளர் பிரசாரம் செய்ய எதிர்ப்பு. முஸ்லிம்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு


பா.ஜ.க. சிறுபான்மைபிரிவு தேசிய செயலாளர் பிரசாரம் செய்ய எதிர்ப்பு. முஸ்லிம்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Feb 2022 11:59 PM IST (Updated: 13 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் பிரசாரம் செய்வதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலூர் சார்பனாமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் பிரசாரம் செய்வதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலூர் சார்பனாமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரசாரம் செய்ய எதிர்ப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பா.ஜ.க. 35 வார்டுகளில் தனித்து போட்டியிடுகிறது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அந்த கட்சியின் சிறுபான்மைபிரிவு தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் நேற்று காலை வந்தார். முதற்கட்டமாக அவர் வேலூரில் சார்பனாமேடு பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் அங்கு திரண்டு வந்து பிரசாரம் செய்த சையதுஇப்ராஹிமுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், இப்ராஹிம் இந்த பகுதியில் பிரசாரம் செய்யக் கூடாது என்று அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதனால் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அப்பகுதி முஸ்லிம்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சையது இப்ராஹிமை பலத்த பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

போலீஸ் நிலையத்தில் புகார்

அவரிடம் ‘‘சார்பனாமேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தொடர்ந்து அங்கு பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது’’ என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் அவர், ‘‘ என்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்து தடை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எவ்வித தடையும் இல்லாமல் பிரசாரம் செய்ய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து இப்ராஹிம், வேலூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தார். அதன்பின்னர் அவர் பிரசாரம் மேற்கொள்ளாமல் புறப்பட்டு சென்றார்.

Next Story