கொத்தனாரிடம் ரூ.1½ லட்சம் மோசடி


கொத்தனாரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 14 Feb 2022 12:00 AM IST (Updated: 14 Feb 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவனத்தில் 1 சதவீத வட்டியில் கடன் தருவதாக கூறி கொத்தனாரிடம் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 
கொத்தனார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் காளிதாசன் (வயது 38), கொத்தனார். இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் 1 சதவீத வட்டியில் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்குவதாக ஒரு நிதி நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு வந்துள்ளது.
இதையடுத்து, அவர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு விவரம், ஆதார் எண் உள்ளிட்டவற்றை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்குமாறு மர்ம ஆசாமி கூறியுள்ளார்.
ரூ.3 லட்சம் வரை கடன் தருவதாக...
இதனை நம்பி அவரும் அவற்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கிறார். அப்போது காளிதாசனுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என மர்ம ஆசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதற்காக ஆவணங்கள் கட்டணம், காப்பீடு கட்டணம், முதல் 3 மாத தவணை தொகையை முன்கூட்டியே செலுத்துதல் என ஒவ்வொரு முறையும் கூறி அதற்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்தும்படி மர்ம ஆசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.  இதனைதொடர்ந்து அவரும் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்தை வங்கியில் செலுத்தினார். இந்த நிலையில் மேலும் ரூ.40 ஆயிரம் அனுப்புமாறு அந்த செல்போன் எண்ணில் இருந்து மர்ம ஆசாமி கூறியிருக்கிறார்.
போலீசார் விசாரணை
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காளிதாசன் இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில்  புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமியின் செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வைத்து விசாரித்து வருகின்றனர்.
இது போன்று செல்போன் எண்ணுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story