அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
மளிகை கடைகளில் ஒயின் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே ஒத்தி வைத்து உள்ளார்.
மும்பை,
மளிகை கடைகளில் ஒயின் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே ஒத்தி வைத்து உள்ளார்.
ஒயின் விற்பனைக்கு எதிர்ப்பு
மராட்டியத்தில் சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி வழங்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் மாநில அரசுக்கு கடிதங்களை எழுதினார்.
இந்தநிலையில் அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால், இன்று (திங்கட்கிழமை) முதல் கடைகளில் ஒயின் விற்பனையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தார்.
உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
இந்தநிலையில் நேற்று அன்னா ஹசாரேவின் சொந்த ஊரான அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது, தனது உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அன்னா ஹசாரே கிராம மக்களிடம் கூறினார். இது குறித்து அவர் பொதுமக்கள் இடையே பேசுகையில், ‘‘மாநிலத்தில் பீர் பார், பெர்மீட் ரூம், கடைகளில் ஒயின் விற்கப்படுகிறது. அதன்பிறகு ஏன் அரசு சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் ஒயினை விற்க விரும்புகிறது?. மக்கள் போதைக்கு அடிமையாவதை அதிகரிக்க அரசு விரும்புகிறதா?. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் என்னிடம் பேசினர். அப்போது நான் மராட்டியத்தில் வாழ்வதாக உணரவில்லை என்றேன். இதையடுத்து தங்களின் முடிவை பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறினர்’’ என்றார்.
மேலும் இது குறித்து அன்னா ஹசாரே தெரிவிக்கையில், மாநில அரசு மந்திரி சபையின் முடிவு குறித்து பொதுமக்களிடம் கருத்து மற்றும் ஆட்சேபனைகளை கேட்க முடிவு செய்து உள்ளது. பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகு தான் அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளது. எனவே எனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்து உள்ளேன்’’ என கூறினார்.
Related Tags :
Next Story