4 பேருக்கு அரிவாள் வெட்டு
வடக்கு விஜயநாராயணம் அருகே 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள படப்பார்குளத்தைச் சேர்ந்தவர்கள் காமராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது 22), பரமசிவன் மகன் முருகப்பெருமாள் (29). கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஜோதி (40) என்பவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியை நாய் ஒன்று கடித்து காயப்படுத்தியது. ஆட்டுக்குட்டியை கடித்த நாய் ஆனந்தராஜ்க்கு சொந்தமான நாய் என்று முருகப்பெருமாளும், முருகப்பெருமாளுக்கு சொந்தமான நாய் என்று ஆனந்தராஜ் தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த பிரச்சனை சம்பந்தமாக நேற்று காலை இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு தரப்பினரும் அரிவாளால் தாக்கி கொண்டனர். இதில் ஆனந்தராஜ், அவரது தம்பி சிவா, தாய் பத்மாவதி ஆகிய 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பதிலுக்கு ஆனந்தராஜ் தரப்பினர் தாக்கியதில் முருகப்பெருமாளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சூர்யா (19) என்பவரை கைது செய்தார்.
Related Tags :
Next Story