குமரியில் 2-வது கட்ட கணக்கெடுப்பு: பறவைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு


குமரியில் 2-வது கட்ட கணக்கெடுப்பு: பறவைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2022 1:51 AM IST (Updated: 14 Feb 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 2-வது கட்டமாக நடந்த கணக்கெடுப்பில் பறவைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளதாக மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா தெரிவித்தார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் 2-வது கட்டமாக நடந்த கணக்கெடுப்பில் பறவைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளதாக மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா தெரிவித்தார்.
2-வது கட்ட கணக்கெடுப்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் வனத்துறையினரால்  ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு குமரி மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 28, 29-ந் தேதிகளில் முதல் கட்டமாக கடலோர நீர்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் 4 குழுக்கள் கடலோர பகுதிக்கு சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். தற்போது 2-வது கட்டமாக நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. இந்த பணியில் பறவை ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய 5 குழுக்கள் ஈடுபட்டது. 
இந்த பணியை மாவட்ட வன அதிகாரி மற்றும் வன உயிரின காப்பாளர் இளையராஜா தலைமையில், பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் மற்றும் வனவர் பிரசன்னா ஆகிேயார் கண்காணித்தனர். 
14 குளங்கள்
இதில் சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்க புத்தேரி குளம், தத்தையார்குளம், அச்சங்குளம், நரிக்குளம், அழகப்பபுரம், புத்தேரி குளம், இறச்சகுளம், கோதண்டராமர் குளம், வேம்பனூர் குளம், ஆளூர் குளம் ஆகிய 14 குளங்களில் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.  
அப்போது உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டன. ஆனால் வெளிநாட்டுப் பறவைகள் குறைவான எண்ணிக்கையில் தென்பட்டன. உள்நாட்டுப் பறவைகள் அதிக அளவில் காணப்பட்டது. 
இந்த கணக்கெடுப்பின் இறுதியில் 42 வகையான 5,317 நீர் பறவைகள் மற்றும் 28 வகையான 2002 நிலப்பறவைகளும் இருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாவட்ட வன அதிகாரி இளையராஜா தெரிவித்தார்.

Next Story