பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக திரளான பக்தர்கள் வந்தனர்.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக திரளான பக்தர்கள் வந்தனர்.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை, மாசி, பங்குனி, சித்திரை, ஆடி உள்ளிட்ட மாதங்கள் மிகவும் சிறப்பானவை ஆகும். இந்த மாதங்களில் கோவிலில் சிறப்பு விழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தென் மாவட்டங்களிலிருந்து எண்ணற்ற பக்தர்கள் பாதயாத்திரையாக கூட்டம், கூட்டமாக நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
பாதயாத்திரை
மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விருதுநகர் மாவட்டம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
அதேபோல தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மன் பாடல்களை பாடியவாறு வந்தனர். நேற்று அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களின் பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட போலீசார் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் மயில், செல்லபாண்டியன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story