‘டோயிங்’ பணிகளை போலீசார் மேற்கொள்ள சாத்தியமில்லை - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேச்சு
பெங்களூருவில் போதிய வாகனங்கள் இல்லாததால் ‘டோயிங்’ பணிகளை போலீசாரே மேற்கொள்ள சாத்தியமில்லை என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
டோயிங் விவகாரம்
பெங்களூரு பானசாவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கேட்கும் பிரச்சினைகளுக்கு, போலீஸ் அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர்.
அதன்படி, பெங்களூருவில் நிலவும் டோயிங் விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம், பொதுமக்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-
முடிவு எடுக்கப்படவில்லை
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை தனியார் மூலமாக டோயிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக டோயிங் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை டோயிங் செய்யும் பணிகளை குத்தகை அடிப்படையில் மீண்டும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அதே நேரத்தில் போலீசாரே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களது கருத்துகளும் ஏற்று கொள்ளப்படுகிறது. தற்போது டோயிங் பணிகளை செய்ய 50 வாகனங்கள் உள்ளன. அந்த அளவுக்கு போலீஸ் துறையில் வாகனங்கள் இல்லை.
சாத்தியமில்லை
வாகனங்களை டோயிங் செய்ய போதுமான அளவு போலீசாரும் இல்லை. எனவே டோயிங் செய்ய புதிதாக வாகனங்களை வாங்குவது, அதற்காக தனியாக போலீசாரை நியமனம் செய்வது சுலபமான விஷயம் அல்ல. ஏனெனில் வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட வேண்டும். புதிதாக போலீசாரை நியமித்தால் சம்பளம் வழங்க வேண்டும். அதனால் போலீசாரே டோயிங் பணிகளை மேற்கொள்வது சாத்தியமில்லை.
இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. டோயிங் பணிகளை எப்படி மேற்கொள்வது, தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? அல்லது போலீசாரே இதற்காக தனியாக நியமிக்கப்படுவார்களா? என்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story