கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது


கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 14 Feb 2022 3:08 AM IST (Updated: 14 Feb 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார்.

பெங்களூரு:

சட்டசபை கூட்டத்தொடர்

  கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடர் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார். இன்று காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பாக 10.55 மணிக்கு கவர்னர் விதான சவுதாவுக்கு வருகிறார்.

  அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சபாநாயகர் காகேரி, சட்டத்துறை மந்திரி மாதுசாமி ஆகியோர் வரவேற்று சபைக்கு அழைத்து வருவார்கள்.

பல்வேறு திட்டங்கள்

  அதைத்தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்குவார். கவர்னர் உரையில் கர்நாடக அரசு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் அரசு செய்த பணிகள் மற்றும் வரும் நாட்களில் அரசு மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து இந்த உரையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடரை முன்னிட்டு விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதி இல்லை என்று நகர போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.

  இன்று தொடங்கும் இந்த கூட்டத்தொடர் வருகிற 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் ஹிஜாப் விவகாரத்தால் பள்ளி-கல்லூரிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரச்சினை கிளப்ப திட்டமிட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தம் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் காகேரி ஏற்கனவே கூறியுள்ளார்.

  சட்டசபை கூட்டத்தொடரையொட்டி விதான சவுதா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story