கர்நாடகத்தில் இன்று உயர்நிலைப் பள்ளிகள் திறப்பு
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவிட்டதை அடுத்து மாநிலத்தில் உயர்நிலை பள்ளிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. அனைத்து மாணவர்களும் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெங்களூரு:
போராட்டத்தில் வன்முறை
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக்கல்லூரி முதல்வர் அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் அந்த கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து அந்த முஸ்லிம் மாணவிகள் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் அந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. இதில் அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து இடைக்கால உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. இந்தநிலையில் கர்நாடகத்தில் 14-ந் தேதி உயர்நிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) உயர்நிலை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளையும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அனைத்து மாணவர்களும் ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விடுமுறை
கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகளுக்கு 16-ந் தேதி வரையும், பிற கல்லூரிகளுக்கு 17-ந் தேதி வரையும் ஏற்கனவே விடுமுறை விடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உயர்நிலைப் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தவறான தகவல்கள்
கர்நாடகத்தில் நாளை(இன்று) உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நான் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். இதில் பள்ளிகளில் நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் உள்ளூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அமைதி நிலவ முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.
நிலைமையை ஆராய்ந்த பிறகு பி.யூ.கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதை போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பள்ளி-கல்லூரிகளில் இயல்புநிலை திரும்ப வேண்டும் என்பது அரசின் விருப்பமாக உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அரசின் முன்னுரிமை.
பொருளாதார நிலை
கர்நாடகத்தின் அனைத்து துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மாநிலத்தின் பொருளாதார நிலை மீண்டும் வழக்கமான நிலையை நோக்கி வருகிறது. வரி வருவாய் வசூல் சீராகி வருகிறது.
மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலனை உறுதி செய்யயும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கர்நாடக அரசின் நிதி நிலையையும் அரசு கருத்தில் கொள்ளும். பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். ஏழை மக்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாச மூர்த்தி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அறிக்கை
அந்த குழு தனது இடைக்கால அறிக்கையை விரைவில் அரசுக்கு வழங்கும். அதில் போக்குவரத்து கழகங்கள் நஷ்டம் அடையாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் வழங்கப்படும். அதேபோல் மின்சாரத்துறையை சீரமைப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் தனது அறிக்கையை அரசுக்கு வழங்கும்.
அந்த அறிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து கழகங்கள் மற்றும் மின்சார துறை ஆகியவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story