கடந்த ஆண்டு கோவையில் 94603 வாகனங்கள் பதிவு


கடந்த ஆண்டு கோவையில் 94603 வாகனங்கள் பதிவு
x
தினத்தந்தி 14 Feb 2022 5:07 AM IST (Updated: 14 Feb 2022 5:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலுக்கு மத்தியில் கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 94 ஆயிரத்து 603 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வட்டார இணை போக்குவரத்து கமிஷனர் தெரிவித்தார்.

கோவை

வீட்டுக்கு ஒரு வாகனம் என்ற நிலை மாறி தற்போது ஒரு நபருக்கு ஒரு வாகனம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக வாங்கும் வாகனங்களை வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ.) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங் களில் கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 94 ஆயிரத்து 603 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.இது குறித்து கோவை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் உமாசக்தி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மேற்கு, மேட்டுப் பாளையம் உள்பட 6 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் உள்ளன. இங்கு 2019-ம் ஆண்டு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 388 வாகனங்களும், 2020-ம் ஆண்டு 90 ஆயிரத்து 585 வாகனங்களும், கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 94 ஆயிரத்து 603 வாகனங்கள் பதிவாகி உள்ளன.

ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெறும் 531 வாகனங்கள் மட்டுமே பதிவாகின. அதற்கடுத்த மாதங்கள் வாகன பதிவு அதிகரித்தது. இதேபோல் கடந்த நிதி ஆண்டான மார்ச் வரை சாலை வரி உள்பட ரூ.61¾ கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.38¼ கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலக்கில் 61 சதவீதம் வசூலாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story