வண்டலூர் உயிரியல் பூங்காவில் திருடப்பட்ட 2 அணில் குரங்குகள் மீட்பு - ரூ.4 லட்சத்துக்கு விற்ற பூங்கா ஊழியர் உள்பட 4 பேர் கைது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் திருடப்பட்ட 2 அணில் குரங்குகள் மீட்பு - ரூ.4 லட்சத்துக்கு விற்ற பூங்கா ஊழியர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2022 6:07 AM IST (Updated: 14 Feb 2022 6:07 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் திருடப்பட்ட அரிய வகை அணில் குரங்குகளை மீட்ட போலீசார், அதனை ரூ.4 லட்சத்துக்கு விற்ற பூங்கா ஊழியர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரும்புக்கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த அரிய வகையை சேர்ந்த 2 அணில் குரங்குகள் மாயமானது. இதுகுறித்து பூங்கா வனச்சரகர் வாசு அளித்த புகாரின் பேரில், ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு அணில் குரங்குகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

பூங்கா பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் ஒப்பந்த ஊழியரான சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த சத்தியவேல் (வயது 34) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர், தனது நண்பருடன் சேர்ந்து அந்த 2 அணில் குரங்குகளையும் திருடியதை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் சத்தியவேல் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

அரிய வகையான அணில் குரங்குகள், வெளி சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு விலை போகும் என்பதால் எனது நண்பரான ஜானகிராமன் என்பவருடன் சேர்ந்து பூங்காவில் உள்ள அணில் குரங்குகளை திருடுவதற்கு திட்டமிட்டோம்.

அதன்படி கடந்த 7-ந் தேதி மாலை ஜானகிராமன், பார்வையாளர்கள்போல் டிக்கெட் எடுத்து பூங்காவுக்குள் சென்று பதுங்கி கொண்டார். பின்னர், ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் அணில் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டு கம்பியை ஜானகிராமன் கட்டர் மூலம் துண்டித்து, அங்கிருந்த 2 ஆண் அணில் குரங்குகளை திருடி விட்டு பூங்கா சுற்றுச்சுவர் மீது ஏறி வண்டலூர்-கேளம்பாக்கம் வழியாக தப்பிச் சென்றார்.

பின்னர் காரணைப்புதுச்சேரி கம்சலா தெருவை சேர்ந்த லோகநாதன் என்பவருடன் சேர்ந்து சென்னை கொளத்தூர் திருப்பதி நகர், வள்ளலார் தெருவில் உள்ள வினோத் என்பவரிடம் ரூ.4 லட்சத்துக்கு 2 அணில் குரங்குகளையும் விற்பனை செய்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஒட்டேரி போலீசார் அணில் குரங்குகளை திருடியதாக பூங்கா தற்காலிக ஊழியர் சத்தியவேல், ஜானகிராமன் (21), லோகநாதன் (21), வினோத் (29) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

வினோத்திடம் இருந்து 2 அணில் குரங்குகளை பறிமுதல் செய்த போலீசார், மீட்கப்பட்ட அணில் குரங்குகளை மீண்டும் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story