ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு


ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 14 Feb 2022 6:10 AM IST (Updated: 14 Feb 2022 6:10 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. பேட்டை அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் பலியானார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி மீட்டனர் .

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியம் விளக்கணாம்பூடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி. இவரது மகன் மோஹித் காந்தி (வயது 15). இவன் அம்மையார்குப்பம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மோஹித் காந்தி தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஆர்.கே. பேட்டை தொட்டேசம்மன் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றான்.

மோஹித் காந்திக்கு நன்றாக நீந்தத் தெரியும். ஆனால் நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் மேலிருந்து குதித்து விளையாடியதாக தெரிகிறது.

அப்போது திடீரென மோஹித் காந்தி கிணற்றில் மூழ்கி மாயமானார். இதை கண்ட சக நண்பர்கள் மாணவனின் தாய் ரேவதிக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து ரேவதி பள்ளிப்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் கிணற்றில் மூழ்கிய மோஹித் காந்தியை 5 மணி நேரம் போராடி பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் ஆர்.கே. பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story