ரூ.3½ லட்சம் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஆந்திர வாலிபர் கைது
ரூ.3½ லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை விற்பனை செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
தமிழகத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் பள்ளி மாணவர்கள் இடையே அதிகரித்து வருகிறது. போதை பொருட்களை விற்கும் கூட்டம் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் வருண்குமார் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்.அவர் பொறுப்பேற்ற நாள்முதல் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை வேரோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் பொதுமக்கள் எந்த வித தயக்கமும் இன்றி போலீஸ் துறையை அணுகி தகவல்களை தெரிவிக்கும் வண்ணம் செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் அந்த செல்போன் எண்ணிற்கு பள்ளி மற்றும் கல்லூரி அருகில் போதைப்பொருட்களை தெலுங்கில் பேசக்கூடிய நபர் ஒருவர் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா, சக்திவேல் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் புட்லூர் ரெயில் நிலையம் அருகே தனியார் பள்ளி அருகில் சந்தேகத்திற்கிடமாக தோள் பையுடன் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலம், கோதாவரி மண்டலத்தை சேர்ந்த சீனிவாசலு மகன் ஆதித்யா (வயது 22) என்பது தெரியவந்தது.
அவரிடம் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா பொருள்கள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதால் அதனை ரெயில் மற்றும் பஸ் மூலம் எடுத்துச் சென்றால் பிடித்து விடுவார்கள் என பயந்து அதனை எண்ணெய் வடிவமாக மாற்றி நாட்டு மருந்து எனக் கூறி எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா, சக்திவேல் மற்றும் அவர்களது குழுவினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா பொருட்களின் பழக்கத்தை அறவே ஒழிக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது பற்றி தெரிந்தால் 6379904848 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து போதையில்லா சமுதாயத்தை உருவாக்க உதவுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story